×

வெறிச்சோடிய கொடிவேரி அணை

கோபி : கோபி அருகே  உள்ள கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர்  வழியிலேயே  திருப்பி அனுப்பியதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.கோபி அருகே  உள்ள கொடிவேரி அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் அருவி  போல் கொட்டுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க  முடியும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி திருப்பூர்,  கோவை, நாமக்கல் உள்ளிட்ட  வெளி மாவட்டங்களில் இருந்தும்  அரசு விடுமுறை  மற்றும் பண்டிகை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்  வருவது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக ஆடிபெருக்கு பண்டிகையின்போது  முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகவும். புதுமணத்தம்பதியரும் அதிகளவில்  கொடிவேரி அணைக்கு வருவது வழக்கமாக உள்ளது.ஆனால் நேற்று கொரோனா தொற்று  காரணமாக கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை  விதித்து உள்ளதுடன் அணையும் மூடப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து  இதுவரை வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதால் அணையில் இருந்து  சிறிதளவே தண்ணீர் கொட்டியது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து  தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கு மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது.இந்நிலையில்  கடந்த ஆண்டு வரை அணை மூடப்பட்டாலும், பாலத்தின் மேல் நின்று அணையை  பார்த்தும், செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் சென்றனர். ஆனால் இந்த முறை  அணை அருகே உள்ள பாலத்தில் கூட நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.  மேலும்  அந்த பகுதியில் 10 க்கும் மேற்பட்ட உணவகங்கள், மீன் கடைகள் இயங்க தடை  விதிக்கப்பட்டதால் அணை பகுதியே முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் பாலத்தில் யாரும் நிற்காதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அணையின்  இருபுறமும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு  பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அந்த வழியாக வருவோர்களை  தடுத்து நிறுத்தி உரிய விசாரணை நடத்தி அதன் பின்னரே அனுமதிக்கின்றனர்.இதனால் வெளியூரில் இருந்து குடும்பத்துடன் வந்தவர்கள் பலரும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்….

The post வெறிச்சோடிய கொடிவேரி அணை appeared first on Dinakaran.

Tags : Dam ,Kodiveri Dam ,Gobi ,Dinakaran ,
× RELATED கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி